எம்.எல்.ஏ ஆவதற்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கடந்த 8 வருடங்களாக கடைபிடித்து வருகிறார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

Published Date: October 26, 2024

CATEGORY: CONSTITUENCY

முதல் நாளில் சொன்ன வார்த்தை.. 8 வருடங்களாக விடாமல் தொடரும் அமைச்சர் பிடிஆர்! 16வது ரிப்போர்ட் கார்டு

மதுரை: எம்.எல்.ஏ ஆவதற்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கடந்த 8 வருடங்களாக கடைபிடித்து வருகிறார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். முதல் முறையாக தான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டபோது பிரச்சாரத்தின் முதல் நாளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறக்காமல் செயல்படுத்தி வருகிறார்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருபவர்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான பி.டி.ராஜனின் பேரன் பழனிவேல் தியாகராஜன். திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன்.

பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மறையும்போது பன்னாட்டு வங்கி ஒன்றில் உயரிய பொறுப்பில் பணியாற்றி வந்தார் பழனிவேல் தியாகராஜன். பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று அரசியலுக்கு வந்தார்  பி.டி.ஆர். திமுகவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டார்.

2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏவாக தேர்வானார்.

அவரது திறமைக்குச் சான்றாக தேடி வந்தது முக்கியமான நிதியமைச்சர் பொறுப்பு. அதிலும் வெள்ளை அறிக்கை, நிதி சீர்த்திருத்தம், நிதி நெருக்கடியை குறைப்பது என அதிரடி காட்டினார்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். கடந்த ஆண்டு மே மாதம் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டார்.

இந்த நிலையில்  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆறு மாதங்களாக தொகுதியில் தான் மேற்கொண்ட பணிகள் குறித்த தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதனை தனது தொகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று விநியோகித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "2016 சட்டசபை தேர்தலின்போது கலைஞர் என்னை மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவித்தார். அப்போது முதன்முதலாக நான் இங்கு பிரச்சாரம் செய்தபோது மக்களுக்கு ஒரு வாக்குறுதியைக் கொடுத்தேன். என்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்தால் 6 மாதங்களுக்கு ஒருமுறை எனது செயல்பாட்டு அறிக்கையை உங்களுக்கு வழங்குவேன் என உறுதி கொடுத்தேன். வந்த புகார்கள், தீர்வு கண்டது, என்னென்ன பணிகளை செய்தேன் என ரிப்போர்ட் கார்டு வழங்குவேன் என வாக்குறுதி அளித்தேன். அதன்படியே 6 மாதங்களுக்கு ஒருமுறை ரிப்போர்ட் கார்டு வெளியிட்டு வருகிறேன்.

2021 சட்டசபை தேர்தலில் எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தார் முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின். முதல் நாள் கொடுத்த வாக்குறுதியை மறவாமல், 6 மாதங்களுக்கு ஒருமுறை ரிப்போர்ட் கார்டை தொகுதி மக்களிடம் அவரவர் வீடுகளுக்குச் செல்லும் வகையில் வழங்கி வருகிறேன். தற்போது 16வது ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுள்ளேன். எம்.எல்.ஏவாக நான் எப்படி பணியாற்றுகிறேன் என்பதை இந்த செயல்பாட்டு அறிக்கை மக்களுக்கு ஓரளவுக்கு தெளிவு கொடுக்கும் என நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Media: tamil.oneindia.com